திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசல் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசல் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. மேளதாளம் இசைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று, கோட்டைக்குளத்தில் கரைக்க முடிவு செய்யப்பட்டது.
அதேநேரம் கடந்த 2008-ம் ஆண்டு குடைப்பாறைபட்டி விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பேகம்பூரில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 4 துணை சூப்பிரண்டுகள் உள்பட மொத்தம் 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் குடைப்பாறைபட்டி முதல் பேகம்பூர் வரை சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து குடைப்பாறைபட்டியில் பூஜைகள் நடத்தப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது. இதில் பெண்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேளதாளம், வாணவேடிக்கை முழங்க சிலை ஊர்வலம் பேகம்பூருக்கு வந்தது. பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே வந்ததும், மேளதாளம் இசைப்பது நிறுத்தப்பட்டது.
பின்னர் விநாயகர் துதி மற்றும் பஜனை பாடல்களை பாடியபடி சிலை ஊர்வலம் சென்றது. பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் நுழைவுவாயில் பகுதியை விநாயகர் சிலை கடந்ததும், மீண்டும் மேளதாளம் இசைத்தபடி ஊர்வலம் தொடர்ந்தது. பின்னர் யானைதெப்பம், மேற்குரதவீதி, தாலுகா அலுவலக சாலை வழியாக கோட்டைக்குளத்தை ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு பூஜைகள் செய்யப்பட்டு விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
இதற்கிடையே சிலை ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் அருகே மேளதாளம் இசைத்தது, இளைஞர்கள் சில கோஷமிட்டபடி ஆடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசல் முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதையடுத்து பள்ளிவாசல் முன்பு சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டித்து கோஷங் களை எழுப்பினர்.
மேலும் அதுபற்றி தகவல் அறிந்த மேலும் பலர் பள்ளிவாசல் நோக்கி திரண்டு வந்தனர். இதையறிந்த போலீசார், பேகம்பூர் சிக்னல் அருகே அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், ஆர்.டி.ஓ. உஷா தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story