நாமக்கல் அருகே, விநாயகர் சிலை கரைப்பதில் இருதரப்பினர் இடையே மோதல் - பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்


நாமக்கல் அருகே, விநாயகர் சிலை கரைப்பதில் இருதரப்பினர் இடையே மோதல் - பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Sept 2019 3:45 AM IST (Updated: 5 Sept 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே விநாயகர் சிலை கரைப்பதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜிக்கப்பட்ட சிலைகள், மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்களும், முத்துகாப்பட்டியை சேர்ந்தவர்களும் நேற்று காவிரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்றனர்.

அப்போது அவர்களுக்குள் சிலையை கரைப்பதில் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆர்.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தாங்கள் வந்த லாரியில் ஏறி ஊருக்கு திரும்பினர்.

முத்துகாப்பட்டியை சேர்ந்தவர்கள், சரக்கு ஆட்டோவில் அவர்களை விரட்டி சென்று, நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி ஏரிக்கரையில் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் சென்ற லாரி கண்ணாடியை அடித்து நொறுக்கியதுடன், லாரியில் வந்தவர்களை கல், கட்டை போன்றவற்றால் சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு லாரியில் வந்தவர்களும் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மணிவண்ணன் (வயது 27), மணிகண்டன் (25), கவுதமன் (18) ஆகியோரும், ராணி (51), சத்யா (27) ஆகிய 2 பெண்களும், முத்துகாபட்டியை சேர்ந்த கவின் (16) என 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். அவர்களில் ஒரு சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதி கலவரம் ஏற்பட்ட பகுதிபோல காட்சி அளித்தது.

இதையொட்டி அங்கிருந்த டாஸ்மாக் கடை சிறிது நேரம் பூட்டப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story