பாரம் ஏற்றி வந்த லாரி மீது அமர்ந்து பயணம்: மின்சாரம் தாக்கி கிளனர் பரிதாப - சாவு தலைவாசல் அருகே சோகம்


பாரம் ஏற்றி வந்த லாரி மீது அமர்ந்து பயணம்: மின்சாரம் தாக்கி கிளனர் பரிதாப - சாவு தலைவாசல் அருகே சோகம்
x
தினத்தந்தி 5 Sept 2019 3:45 AM IST (Updated: 5 Sept 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே பாரம் ஏற்றி வந்த லாரியின் மீது அமர்ந்து வந்த கிளனர், மின்சாரம் தாக்கி பலியானார்.

தலைவாசல், 

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அக்பர் அலி, லாரி டிரைவர். இவர் திருச்சியில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ராட்சத இரும்பு உருளை (ரோலர்) பாரத்தை லாரியில் ஏற்றிச்சென்றார். லாரியில் கிளனராக மும்பையை சேர்ந்த சல்மான் அன்ஷர் ஷேக்(வயது 25) என்பவரும், மற்றொரு நபரும் உடன் வந்தனர்.

நேற்று காலையில் தலைவாசல் அருகே மணிவிழுந்தான் தனியார் கல்லூரி எதிரில் அந்த ராட்சத ரோலர் ஏற்றிய லாரி வந்தது. ரோலரின் மேல் பகுதியில் இருந்த கூரை போன்ற பகுதியில் கிளனர் சல்மான் அன்ஷர் ஷேக் இருந்தார். அப்போது சாலையின் மேற்புறமாக சென்ற மின்சார வயர் எதிர்பாராதவிதமாக அவர் மீது உரசியது.

இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவர், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தலைவாசலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தலைவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் சல்மான் அன்ஷர் ஷேக் பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சாலையில் உள்ள மின்பாதையில் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தம் செய்து, மின் இணைப்பை சரி செய்தனர்.

இந்த சோக சம்பவம் குறித்து அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கூறும் போது, ‘இந்த சாலையில் மிக உயரமான பாரம் ஏற்றிய வாகனங்கள் வரும் போது இதுபோன்று தாழ்வாக பறக்கும் மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த விபத்தில் மும்பை வாலிபர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளார். இதுபோன்ற விபத்துகள் மீண்டும் ஏற்படும் முன்பு அந்த மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும்’ என்றார்கள்.

Next Story