உடன்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


உடன்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Sep 2019 10:30 PM GMT (Updated: 4 Sep 2019 8:25 PM GMT)

உடன்குடியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடன்குடி, 

உடன்குடி சாதரக்கோன்விளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் மகராசி (வயது 18). இவர் பிளஸ்-2 படித்து உள்ளார். இவர் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிக்க விரும்பினார். ஆனால் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக, பெற்றோர் மகராசியை உயர்கல்வி படிக்க வேண்டாம் என்று கூறினர்.

இதனால் மகராசி மனமுடைந்த நிலையில் இருந்தார். நேற்று காலையில் சிவன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். மகராசியின் தங்கையும், தம்பியும் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். தாய் பேச்சியம்மாள், அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகராசி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டுக்கு திரும்பி வந்த பேச்சியம்மாள் தன்னுடைய மகள் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த மகராசியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story