பெண் உள்பட 6 பேரை தாக்கிய வழக்கு: 7 பேருக்கு ஜெயில் தண்டனை - தென்காசி கோர்ட்டு தீர்ப்பு


பெண் உள்பட 6 பேரை தாக்கிய வழக்கு: 7 பேருக்கு ஜெயில் தண்டனை - தென்காசி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Sep 2019 10:15 PM GMT (Updated: 4 Sep 2019 8:25 PM GMT)

பெண் உள்பட 6 பேரை தாக்கிய வழக்கில் 7 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தென்காசி,

தென்காசி அருகே கீழஇலஞ்சி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதில் சுகுமார் பிரிவினருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 36) பிரிவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 1-10-2008 அன்று இரவு அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சுகுமார், செல்வகுமார், இசக்கி, ராமசாமி, மற்றொரு இசக்கி மற்றும் ஒரு பெண் ஆகிய 6 பேரும் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த ரஞ்சித்குமார், காந்தி என்ற முத்துக்குமாரசாமி (43), மீனாகுமார் (47), ரவி (36), துரைபாண்டி (58), மூக்கையா (49), செல்லத்துரை (45) ஆகியோர், சுகுமார் தரப்பினரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 6 பேரையும் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதுபற்றி குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் ரஞ்சித்குமார் உள்பட 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தென்காசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி காமராஜ் விசாரித்து, ரஞ்சித்குமாருக்கு 5 ஆண்டுகள், 7 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.1,500 அபராதமும், முத்துக்குமாரசாமிக்கு 4 ஆண்டுகள், 7 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதே போல் மீனாகுமார், ரவி, துரைபாண்டி, மூக்கையா, செல்லத்துரை ஆகியோருக்கு ஒரு ஆண்டு, 8 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.

Next Story