திருவாரூரில், விநாயகர் சிலை ஊர்வலத்தில் சோடாபாட்டில் வீச்சு - ஊர்க்காவல் படையினர் 2 பேர் காயம்


திருவாரூரில், விநாயகர் சிலை ஊர்வலத்தில் சோடாபாட்டில் வீச்சு - ஊர்க்காவல் படையினர் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 5 Sept 2019 4:00 AM IST (Updated: 5 Sept 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சோடாபாட்டில் வீசியதால் ஊர்க்காவல் படையினர் 2 பேர் காயம் அடைந்தனர்.

திருவாரூர்,

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் 330 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவினை தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகளில் கரைக்கப்பட்டன. இதில் திருவாரூர் நகரில் 29 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி வழிபாடு நடந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை திருவாரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த 29 விநாயகர் சிலைகள் கடைவீதியில் ஊமை காளியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் கடைவீதி, பஸ் நிலையம், பனகல் சாலை, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, நேதாஜி ரோடு வழியாக சென்று ஓடம்போக்கி ஆற்றை சென்று அடைந்தன.

பின்னர் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன.

முன்னதாக திருவாரூர் பனகல் சாலை அழகிரி நகரை ஊர்வலம் கடந்த போது திடீரென சோடாபாட்டிலை ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது மர்மநபர்கள் வீசினர். இதில் ஊர்காவல் படையை சேர்ந்த 2 பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுதொடர்பாக திருவாரூர் டவுன் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விநாயகர் சிலை ஊர்வலம் கமலாலயம் மேல்கரையில் சென்ற போது கேபிள் வயரில் சிலை பட்டு உரசியதில் விநாயகர் சிலை ஒன்று முற்றிலும் சேதமானது. இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story