போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருவையாறு நகரம் - புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை


போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருவையாறு நகரம் - புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 5 Sept 2019 3:45 AM IST (Updated: 5 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருவையாறு நகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதால் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்பட பல்வேறு பிரசித்திபெற்ற கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, மை அமாவாசை நாட்களில் ஏராளமானோர் கூடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

திருவையாறில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவில் ஏராளமான இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். திருவையாறில் உள்ள அரசு இசை கல்லூரி, அரசர் கல்லூரி, அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.

திருவையாறை அடுத்த திங்களூரில் நவக்கிரக தலமான சந்திரன் கோவில் உள்ளது. பூண்டிமாதா ஆலயத்துக்கு திருவையாறு வழியாக செல்லலாம். பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திருவையாறு வழியாக செல்கிறது. தஞ்சையில் இருந்து சென்னை, சேலம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஊர்களுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் திருவையாறு வழியாக சென்று வருகின்றன.

அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு வரும் லாரிகள், காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி வரும் லாரிகள் என திருவையாறு நகரம் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

இதுதவிர காவிரி படுகையில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகளாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. திருவையாறில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படாத நாட்களே இல்லை என இந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளும், சுற்றுலா பயணிகளும் அவதிப்படுவது தொடர் கதையாகி விட்டது.

திருவையாறு ஓடத்துறை தெருவை கடந்து செல்வதற்கு ½ மணி நேரத்துக்கு மேலாகிறது என்பது வாகன ஓட்டிகளின் வேதனை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவையாறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story