கும்பகோணத்தில் பரபரப்பு: வீட்டில், பாக்கெட் சாராயம் தயாரித்து விற்பனை
கும்பகோணத்தில் ஒரு வீட்டில், பாக்கெட் சாராயம் தயாரித்து விற்பனை செய்ததாக 3 பெண்கள், 15 வயது சிறுமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் அடிக்கடி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து போலீசார் அந்த கும்பல் குறித்து ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அந்த கும்பல் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகர் அருகே உள்ள உதயம் நகரில் ஒரு வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அந்த வீட்டை கண்காணித்தபோது அங்கு கார்கள், சரக்கு வேன்கள் அடிக்கடி வந்து சென்றன.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பெரிய, பெரிய பேரல்களில் 750 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைத்து ‘பாண்டி ஜூஸ்’ என்ற பெயரில் சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
அந்த வீட்டில் சாராயத்தை பாக்கெட்டுகளில் அடைக்கும் பணியில் பெண்கள் உள்பட 7 பேர் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த ராஜூ(வயது 48), குத்தாலம் மேலசாலை பகுதியை சேர்ந்த ரபீக்(36), சாந்தா(42), செல்வி(44), இவருடைய மகன் அஜித்குமார்(19), தேவயானி(20) மற்றும் 15 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. இவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 லிட்டர் சாராயம், அதை பாக்கெட்டுகளில் அடைக்க பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், சாராயத்தை கடத்த பயன்படுத்திய 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் பாக்கெட் சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story