பையூரில் உழவர் திருவிழா: விவசாயிகளுக்கு ரூ.10.46 லட்சம் சொட்டுநீர் பாசன கருவிகள் - கலெக்டர் பிரபாகர் வழங்கினார்
பையூரில் நடந்த உழவர் திருவிழாவில் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்து 46 ஆயிரம் மதிப்புள்ள சொட்டு நீர் பாசன கருவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் ஒன்றியம் பையூர் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், ஐ.சி.ஏ.ஆர். வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் ஜல்சக்தி அபியான் மாவட்ட அளவிலான உழவர் திருவிழா நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன கருவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு செல்லகுமார் எம்.பி. முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஜல்சக்தி அபியான் திட்ட பார்வையாளர் சரவணன், நாக்பூர் நீர் மேலாண்மை விஞ்ஞானி ஆதிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் இதுவரை 100 ஏரிகள் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளும், 325 குளம் குட்டைகள் தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளும், மாவட்டம் முழுவதும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், நகர தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நல சங்கங்கள், மூலம் 150 ஏரிகள் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் என மொத்தம் 575 ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
95 சதவீத ஏரிகளில் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மதகுகள் சீர் செய்யும் பணிகள், நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்று கால்வாய்கள் தூர்வாரும் பணிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், ஏரிகளின் சுற்றிலும் நில அளவை செய்யும் பணிகளில் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஓசூரில் நகர பகுதியில் உள்ள 17 ஏரிகள் கண்டறியப்பட்டு அதில் 11 ஏரிகள் சிறப்பாக தூர்வாரி குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் செய்யாத வகையில் ஏரி குளங்களை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து நீர் மேலாண்மை கையேட்டை கலெக்டர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் சொட்டு நீர் பாசன கருவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலைவாணி, மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தமிழ்செல்வன், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் அகண்டராவ், மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குனர் சிதம்பரம், இளநிலை பொறியாளர் சந்திரசேகரன், வேளாண்மை பொறியியல் துறை திட்ட உதவியாளர் முகமது இஸ்மாயில், தொழில் நுட்ப வல்லுனர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story