ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி கைது


ஆசைவார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Sept 2019 3:45 AM IST (Updated: 5 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையத்தில் ஆசைவார்த்தை கூறி, பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம், 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 22), கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதான பிளஸ்-1 மாணவியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த சிறுமியிடம் கட்டிட தொழிலாளி நெருங்கி பழகி உள்ளார். இதில் அந்த சிறுமி, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் ஆனார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

உடனே அந்த சிறுமியை பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது தான் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருந்து கருச்சிதைவு ஏற்பட்டு வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது.

இது குறித்து பெற்றோர் அந்த மாணவியிடம் விசாரித்த போது, நடந்த விவரங்களை கூறி கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து அந்த மாணவி ஏத்தாப்பூர் போலீசில் புகார் செய்தார்.

மாணவியின் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மாயக்கண்ணன் மீது ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story