ஆத்தூர் அருகே, கார் கவிழ்ந்தது: தங்கை திருமணத்திற்கு சென்ற என்ஜினீயர் விபத்தில் பலி - தாயார் உள்பட 3 பேர் படுகாயம்


ஆத்தூர் அருகே, கார் கவிழ்ந்தது: தங்கை திருமணத்திற்கு சென்ற என்ஜினீயர் விபத்தில் பலி - தாயார் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Sep 2019 10:30 PM GMT (Updated: 4 Sep 2019 8:27 PM GMT)

ஆத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தங்கை திருமணத்திற்கு சென்ற என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். தாயார் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப் பட்டதாவது:-

ஆத்தூர்,

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 38). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.

இவருடைய தங்கை அபிராமிக்கும், எடப்பாடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு விழுப்புரம் மாவட்டம் தியாக துருகம் பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலில் நேற்று திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்காக மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் வாகனங்களில் கோவிலுக்கு நேற்று காலையில் முதலில் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து, ஈரோட்டில் இருந்து மஞ்சுநாத்தும், அவரது தாயார் சரஸ்வதி(65) மற்றும் அவருடைய உறவினர்கள் ஆனந்தகுமார், சிவமணி ஆகிய 4 பேரும் ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.

இந்த கார், சேலம் மாவட்டம், ஆத்தூர் வழியாக தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை ஆனந்தகுமார் ஓட்டிச்சென்றார். ஆத்தூர் அருகே அப்பமசமுத்திரம் புறவழிச்சாலையில் உள்ள பாலம் அருகே கார் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்தகுமாரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த பகுதியில் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பயணம் செய்த மணமகளின் அண்ணன் என்ஜினீயர் மஞ்சுநாத் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அதே நேரத்தில் காரில் வந்த சரஸ்வதி, ஆனந்தகுமார், சிவமணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் பலியான மஞ்சுநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கோவிலுக்கு மணமகளும், மணமகனும் சென்று சேர்ந்த நிலையில், திருமணம் தடைபட வேண்டாம் என்று கருதிய இருவீட்டாரும், மணமகளின் அண்ணன் இறந்த விபரத்தை மணமக்களிடம் கூறாமல் அந்த திருமணத்தை நடத்தி முடித்தனர். பின்னர் இருவீட்டாரும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மஞ்சுநாத்தின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

இந்த விபத்து குறித்து ஆத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story