திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 4 Sep 2019 10:15 PM GMT (Updated: 4 Sep 2019 8:27 PM GMT)

திருவண்ணாமலையில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள், இளைஞர்கள் சார்பில் முக்கிய இடங்களில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய வடிவிலான விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் காலை மற்றும் மாலை வேளையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் நடந்தன. விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தினால் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோணிராயன் குளம், ஐந்துகண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி, கூர் ஏரி ஆகியவற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தாமரைக்குளத்தில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

பிற்பகல் 2.30 மணி அளவில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா நடந்தது. விழாவுக்கு நகர பொது செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருண்குமார் கருத்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை மாநகர தலைவர் இளங்கோ கலந்துகொண்டு, விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் தொடங்கியது. பின்னர் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் முன்பு பூஜை செய்யப்பட்டு ஊர்வலம் தொடர்ந்து சென்றது. இந்த ஊர்வலம் தேரடி வீதி, திருமஞ்சன வீதி, செங்கம் ரோடு வழியாக தாமரை குளத்திற்கு சென்றது.

கடந்த சில வருடங்களாக ஊர்வலத்தின் போது ஏதாவது தகராறு நடைபெற்று வந்ததால் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ஞானசேகரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என 800 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்த ஆண்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெற வில்லை. மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பிரச்சினை க்குரிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் தாமரைக்குளத்தில் கரைக்கப்பட்டன. குளத்தின் அருகே தீயணைப்பு வாகனம் மற்றும் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். சிறிய சிலைகளை பொதுமக்கள் தண்ணீரில் தூக்கி போட்டும், பெரிய விநாயகர் சிலைகள் கிரேன் மூலம் தண்ணீரில் போடப்பட்டு கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கும் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story