அடகு வைத்த ரூ.4 கோடி நகைகள் மாயம்: வங்கியை திறக்கவிடாமல் வாடிக்கையாளர்கள் போராட்டம்
சோளிங்கரில், வங்கியில் அடகு வைக்கப்பட்ட ரூ.4 கோடி நகைகள் மாயமான சம்பவத்தில் வங்கியை திறக்கவிடாமல் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சோளிங்கர்,
சோளிங்கரில் உள்ள சுப்பாராவ் தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். வங்கியில் கடந்த 2017-ம் ஆண்டு மேலாளராக இருந்தவர் ராமன். அப்போது அவர், சோளிங்கர் போலீசில் கொடுத்த புகாரில், வங்கியில் 156 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 17½ கிலோ நகைகளை காணவில்லை என்று கூறியிருந்தார். இதன் அப்போதைய மதிப்பு ரூ.4 கோடி வரை இருக்கும்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மதிப்பீட்டாளர் பாபு (வயது 35) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் வட்டியுடன் நகைக்கான பணத்தை கட்டினர். ஆனால் அவர்களுக்கு நகைகள் திருப்பி கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் அடிக்கடி வங்கிக்கு சென்று நகைகளை திருப்பி தருமாறு அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர். நகைகள் மாயமானது தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாக அவர்களிடம் அதிகாரிகள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென வாடிக்கையாளர்கள் வங்கி முன் திரண்டனர். அவர்கள் நகையை திருப்பி தரக்கோரி வங்கியை திறக்கவிடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சோளிங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, பஷீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
வங்கி அதிகாரிகளும் அங்கு இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நாளை (இன்று) வங்கி உயர் அதிகாரிகள் வந்து உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று போலீசார் முன்னிலையில் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சமரசம் அடைந்த அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story