தங்கம் விலை உயர்வு: ஏழை, எளிய மக்களை பாதிக்கும் - கடலூர், விழுப்புரம் மாவட்ட பெண்கள் கருத்து
தங்கம் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் என்று கடலூர், விழுப்புரம் மாவட்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடலூர்,
தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்று காலை நேர நிலவரப்படி, பவுனுக்கு ரூ.288 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 120-க்கு விற்பனை ஆனது. ஆனால் மாலையில் சட்டென்று விலை குறைந்து ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 928-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதாக கடலூர், விழுப்புரம் மாவட்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு:-
கடலூர் அண்ணாநகர் ஆர்.லதா:-
எனக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. அப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.376-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த விலை ஏற்றத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள்தான் பாதிக்கப்படுகிறோம். இருப்பினும் திருமணம், காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது கட்டாயமாக இருந்து வருகிறது.
இதனால் வேறு வழியின்றி கடன் வாங்கியாவது தங்கத்தை வாங்க வேண்டிய நிலையில் என்னை போன்ற நடுத்தர மக்கள் உள்ளனர். பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு இது பெரும் பாதிப்பு தான். ஆகவே தங்கம் விலை குறைந்தால் தான் நல்லது.
சிதம்பரம் என்.டி.சி.நகர். கே.லதா:-
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகைகள் வாங்க முடியவில்லை. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு முன்பு நகைகள் வாங்கி பரிசாக கொடுப்போம். ஆனால் இப்போது பணமாகவே வைத்து விடுகிறோம். இருப்பினும் தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. தங்கத்தின் மீதான மோகம் குறைந்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
விருத்தாசலம் வக்கீல் சாவித்திரி:-
இந்த விலை உயர்வால் சாதாரண மக்களுக்கு தங்க நகைகள் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். தங்கத்தை வாங்குவதற்கு நடுத்தர மக்கள் போராட வேண்டியதாக உள்ளது. தங்கம் வாங்கி திருமணம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சீர்வரிசை செய்ய முடியாமலும் திருமணங்கள் தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏற்றம் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை காட்டுகிறது. இப்படியே சென்றால் தங்கத்தின் மீது பெண்களுக்கு இருக்கும் மோகம் குறையத் தொடங்கிவிடும்.
விழுப்புரம் நடராஜ அங்காளம்மன் கோவில் தெரு அனிதா:-
தங்கத்தின் விலை உயர்வு, பெண் குழந்தைகளை வைத்திருக்கும் என்னைப்போன்ற ஏழை, எளிய தாய்மார்களின் தலையில் இடி விழுந்தாற்போல் உள்ளது. சாதாரண ஏழை, எளிய குடும்பத்தினர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 5 பவுன் முதல் 10 பவுன் வரை நகை போட்டு எப்படியாவது கரைசேர்த்து விட வேண்டும் என்று எண்ணி பல ஆண்டுகளாக நகை வாங்கி சேர்த்து வைப்பார்கள். இதுதான் காலம், காலமாக நடந்து வருகிறது. ஆனால் இன்றைக்கு இருக்கிற விலைவாசியில் அரை பவுன் நகையை சேர்த்து வைப்பதே கஷ்டமான விஷயமாகும். அந்தளவிற்கு தங்கத்தின் விலை மிகவும் எட்டாக்கனியாக உள்ளது.
தங்கத்திற்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளித்தால் ஓரளவு விலை குறையும்.
திண்டிவனம் இந்திராநகர் துளசி:-
உலகளவில் எடுத்துக்கொண்டால் தங்கத்தின் மீதான பயன்பாடு, மோகம் குறைவு. இதனால் வெளிநாட்டினரை தங்கம் விலை உயர்வு பாதிப்பதில்லை. நம்முடைய கலாசாரப்படி பெண்களுக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாக தங்கம் மாறி விட்டது. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கம் சேமிப்பு பொருளாக இருந்தது. தற்போது அந்த நிலை கேள்விக்குறியாக மாறிவிட்டது. தமிழக பெண்களுக்கு தங்கம் மீதான மோகம் குறைய வேண்டும்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆர்.அருணாதேவி:-
குறுகிய காலத்தில் வரலாறு காணாத அளவில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் வசதி படைத்தவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது.
ஆனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோரை கடுமையாக பாதிக்கும். அவர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுக்க நகை வாங்கலாம் என சேமித்து வைத்த பணத்திற்கு 1 பவுன் நகைக்கு மேல் வாங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல் மத்திய அரசு தங்கம் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story