ஈரோடு பஸ்நிலையம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் புகை


ஈரோடு பஸ்நிலையம் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் புகை
x
தினத்தந்தி 4 Sept 2019 10:30 PM (Updated: 4 Sept 2019 8:45 PM)
t-max-icont-min-icon

ஈரோடு பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் திடீர் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு பஸ்நிலையம் அருகே ஷேர் ஆட்டோ நிறுத்தம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் மருந்துக்கடை உள்ளது. இங்கு பழைய மற்றும் வேண்டாத பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து ‘குபு குபு’ என்று புகை வெளியே வந்து கொண்டிருந்தது. அங்கு கிடந்த உபயோகமற்ற மிதியடி விரிப்பான் மற்றும் காகிதங்கள் எரிந்து கொண்டிருந்தன.

இதை பார்த்த நர்சுகள் உள்பட அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினார்கள். இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரிக்குள் இருந்து புகை வெளிவந்ததால் அக்கம்பக்கத்தினர் குவிந்தனர். அவர்கள் உள்ளே யாராவது இருக்கிறார்களா?, அவர்களை காப்பாற்ற வேண்டுமே என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால், ஆஸ்பத்திரிக்குள் நோயாளிகள் யாரும் இல்லை. யாரும் உள்ளே செல்ல வேண்டாம் என்று நர்சுகள் எச்சரிக்கை செய்தனர். மேலும், புகையின் நெடி கடுமையாக இருந்தது. எனவே வந்தவர்கள் அனைவரும் மூக்கை கைக்குட்டைகளால் மூடிக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தீயணைப்பு படையினர் வந்தனர். ஆஸ்பத்திரியின் உள்ளே இருந்து காற்று வெளியே செல்ல வேறு வழி இல்லாததால் வாசல் பகுதி ஒரே புகை மண்டலமாக இருந்தது. எனவே தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு எரிந்து கொண்டிருந்த காகிதங்கள், துணிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் புகை மட்டும் குறையவே இல்லை.

பின்னர் அறைகளில் இருந்த ஜன்னலை திறந்து விட்டனர். ஆனாலும் புகை வெளியே செல்லும் அளவுக்கு காற்றோட்டம் இல்லாததால் புகை அப்படியே நின்றது. தீயணைப்பு படையினர் அந்த பகுதியை சோதனை செய்தபோது, வெள்ளை நிற கேன்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு கேனில் இருந்த திரவம் கீழே வழிந்து அதில் இருந்து புகையும், கடுமையான நெடியும் எழும்பியதை கண்டறிந்தனர்.

இதுபற்றி விசாரித்தபோது, தேவையற்ற பொருட்கள் போடும் அறையில் ஆசிட் (தரை மற்றும் கழிவறைகள் கழுவ பயன்படுத்துவது) கேன்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் இருந்து கசிவு ஏற்பட்டு புகையும், தீயும் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. புகை ஏற்பட்டபோது ஆஸ்பத்திரியில் ஈரோடு ஈ.பி.பி.நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மட்டுமே ஒரு அறையில் இருந்தார். புகை வந்ததும் அவர் அங்கிருந்து வெளியே வந்து விட்டார். நல்லவேளையாக வேறு உள்நோயாளிகள் யாரும் சிகிச்சையில் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story