கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், வாழைப்பழங்கள் விலை உயர்வு - ஒரு கிலோ ரூ.22-க்கு விற்பனை


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், வாழைப்பழங்கள் விலை உயர்வு - ஒரு கிலோ ரூ.22-க்கு விற்பனை
x
தினத்தந்தி 6 Sept 2019 3:15 AM IST (Updated: 5 Sept 2019 8:29 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வாழைப்பழங்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.22-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உத்தமபாளையம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல், திராட்சை, தேங்காய்க்கு அடுத்த படியாக வாழை சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி, சுருளிபட்டி, அணைப்படி, ஆனைமலையன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சின்ன ஓவுலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பச்சை மற்றும் செவ்வாழை ரக வாழை பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

வாழை சாகுபடிக்கு ஏற்ற மண்வளம் மற்றும் தட்பவெப்ப நிலை கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவுவதால் இப்பகுதிகளில் விளைச்சலாகும் வாழைப்பழங்கள் சுவை மிகுந்ததாகவும் தரம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இதனால் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளைச்சலாகும் வாழைப் பழங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அத்துடன் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள சந்தைகளுக்கும் வாழைப்பழங்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. வாழைப்பழங்கள் கிலோ அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.9 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ வாழைப்பழங்கள் தற்போது ரூ.20 முதல் ரூ.22 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதி வாழைப்பழங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் கடும் கிராக்கி உள்ளது. ஏனென்றால் இங்கு விளைச்சலாகும் வாழைப்பழங்களுக்கு மருத்துவ குணமும் இருப்பதே ஆகும். இதனால் நாங்கள் எதிர்பார்த்த விலை கிடைப்பதால் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது என்றனர்.

Next Story