மதுரை-போடி ரெயில் பாதைக்காக கணவாய் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தம்
மதுரை-போடி அகல ரெயில் பாதைக்காக, ஆண்டிப்பட்டி கணவாய் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடிக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு மதுரை-போடி வழித்தடத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் போதிய அளவு நிதி கிடைக்காததால் அகல ரெயில் பாதை பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து அகல ரெயில் பாதை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
ரெயில்வே தண்டவாளங்களை பதித்தல், ரெயில்வே மேம்பாலங்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், ஆண்டிப்பட்டி கணவாய் மலையை குடைந்து ரெயில் பாதையை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதனால் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்கும் என்று நினைத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே மலையை குடைந்து ரெயில் பாதையை அகலப்படுத்தும் பணி 50 சதவீதம் வரை நிறைவடைந்த நிலையில் திடீரென பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மலைப்பகுதியில் உடைக்கப்பட்ட பாறைகளும் அப்புறப்படுத்தபடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் போடி-மதுரை அகல ரெயில் பாதை திட்டம் நிறைவேறுவதில் மேலும் கால தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். மேலும் மலையை குடையும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story