மார்த்தாண்டம் அருகே விபத்து, 7 மாதங்கள் ‘கோமா’வில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சாவு


மார்த்தாண்டம் அருகே விபத்து, 7 மாதங்கள் ‘கோமா’வில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சாவு
x
தினத்தந்தி 6 Sept 2019 3:15 AM IST (Updated: 5 Sept 2019 9:45 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே நடந்த விபத்தில் கடந்த 7 மாதங்களாக ‘கோமா’வில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குழித்துறை,

தக்கலை அருகே பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராபர்ட் (வயது 57). இவர் கடையாலுமூடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு செலஸ்டின் சுபலா (50) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகன் கேரள மாநிலம் காரக்கோணம் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 23-ந் தேதி ஜெஸ்டின் ராபர்டும் அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் மகனை பார்ப்பதற்காக காரக்கோணம் சென்றனர்.

பின்னர், மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்த போது, மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியில், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மனைவி செலஸ்டின் சுபலா பூரண குணமடைந்தார். ஆனால், ஜெஸ்டின் ராபர்டு நினைவு திரும்பாமல் ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை வீட்டுக்கு கொண்டு வந்து சிகிச்சை கொடுக்க தொடங்கினர். இந்தநிலையில், 7 மாதங்களாக ‘கோமா’வில் இருந்த ஜெஸ்டின் ராபர்ட் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story