நத்தத்தில், 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற தந்தை-மகன் கைது


நத்தத்தில், 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற தந்தை-மகன் கைது
x
தினத்தந்தி 6 Sept 2019 4:30 AM IST (Updated: 5 Sept 2019 9:58 PM IST)
t-max-icont-min-icon

நத்தத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

நத்தம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் மாலையில் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து சில்லறை கேட்டான். அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர், நத்தம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து அந்த சிறுவனை பிடித்தனர். பின்னர் அந்த ரூபாய் நோட்டை கைப்பற்றி விசாரணை செய்ததில், அது கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது. மேலும் சிறுவனும் முன்னுக்குப்பின் முரணாக பேசினான். இதைத்தொடர்ந்து சிறுவனையும், அவன் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இன்னொருவரையும் பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொடுக்காடு ஸ்ரீஓம்நகரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் தந்தை-மகன் ஆவர். தனது மகனிடம் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து மாற்ற முயன்றது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு செல்போன், ரூ.2ஆயிரம் கள்ளநோட்டுகள் 6 மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரின் விசாரணையின்போது தந்தையும், மகனும் கூறியதாவது:-

வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் எங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து, சென்னை வண்டலூர் அருகே வந்து கள்ளநோட்டுகளை கொடுப்பார். அதை மாற்றிக்கொடுத்தால் எங்களுக்கு கமிஷன் கிடைக்கும். நத்தத்துக்கு வந்து ஒரு ஓட்டலில் கள்ள ரூபாய் நோட்டை மாற்ற முயன்ற போது மாட்டிக்கொண்டோம் என்றனர்.

இது தொடர்பாக நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வழக்குப்பதிவு செய்து தந்தை , மகனை கைது செய்தார். இந்த சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

Next Story