வாக்காளர் பட்டியலில் பெயர், விவரங்களை திருத்தம் செய்ய புதிய செயலி - கலெக்டர் தகவல்
வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் விவரங்களை புதிய செயலி மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்,
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் குறித்து அனைத்துக்கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜ்குமார் (தேர்தல்), தாட்சாயிணி (பொது) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களே தங்கள் விவரங்களை சரிபார்த்து திருத்தி கொள்ள ஏதுவாக புதிய செயலியை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் செயலியில் VOTER HELPLINE APP &™ EVP (IC-ON) என்ற குறியீட்டை தேர்வு செய்து, வாக்காளர் பதிவு விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
இதில், ஏதாவது தவறு இருப்பின் அவற்றை வாக்களர்களே திருத்தி கொள்ளலாம். இந்த மாற்றங்கள் வாக்காளர் பட்டியல் களப்பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக சரிபார்க்கப்பட்டு, உள்ளடு செய்து திருத்தங்கள் அங்கீகரிக்கப்படும். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் குடும்பத்தினரின் விவரங்களை சரிபார்த்து பெயர், பாலினம், வயது, வீட்டு எண், முகவரி, புகைப்படங்கள் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருப்பின் செய்து கொள்ளலாம்.
அதைதவிர வாக்காளர்கள் வருகிற 30-ந் தேதி வரை வோட்டர் ஹெல்ப்லைன், மொபைல் ஆப் மூலமாகவோ, என்.வி.எஸ்.பி. போர்ட்டல் மூலமாகவோ பொது சேவை மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகத்தில் (உதவி கலெக்டர் அலுவலகங்களில்) அமைந்துள்ள வாக்காளர் உதவி மையம், மாற்றுத்திறனாளிகள், கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள வாக்காளர் உதவி மையம் (1950) மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான சேவைகளை பெறலாம்.
பாஸ்போர்ட்டு, ரேஷன்கார்டு, ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, ஆதார் கார்டு, உழவர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொடுத்து தங்கள் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
வாக்குச்சாவடி மையங்கள் மாற்றுவது குறித்து தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளின் நிலை, பழைய கட்டிடங்களில் வாக்குச்சாவடி மையத்தை அமைத்து வருவது, போதிய இடவசதி இல்லாத வாக்குச்சாவடி மையங்கள் ஆகியவற்றை மாற்றி கல்லூரி மற்றும் புதிய பள்ளி கட்டிடங்களில் வாக்குச்சாவடிகளை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய தாசில்தார்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story