ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு


ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Sep 2019 11:00 PM GMT (Updated: 5 Sep 2019 5:36 PM GMT)

ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது முழுக்க, முழுக்க அரசியல் சார்புடையது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகர்கோவில்,

இலங்கையில் ராஜபக்சே, சிறிசேனா கூட்டணியால் தமிழர்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்றால், ராஜீவ்காந்தி எடுத்த முயற்சியின்படி 13-வது அரசியல் சட்டம் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழர்களுக்கு அதிகாரம்மிக்க ஒரு மாநிலம் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கையில் தமிழர்கள் நிலையான வாழ்க்கை வாழ முடியும். அதற்கு மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியை தமிழக அரசு செய்ய வேண்டும்.

அரசியலில் எதிர்ப்போ, சிறைவாசமோ, வழக்குகளோ வந்தால் அதைக்கண்டு பணிந்து விடுபவர்கள் அல்ல நாங்கள். அதனை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும், துணிவும் எங்களுக்கு உண்டு. ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது முழுக்க, முழுக்க அரசியல் சார்ந்தது. காங்கிரஸ் தலைவர்களின் மரியாதையை குலைக்கவும், காங்கிரஸ் கட்சியின் பெருமையை சிதைக்கவும் சிதம்பரம், சசிதரூர், கமல்நாத், சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குகள் போடப்படுகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் சிறந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. 3½ லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியில் உபரி நிதி ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடியை மத்திய அரசு கைப்பற்றியுள்ளது. இது தவறான அணுகுமுறை. இதன்விளைவு ஒரு வருடம் கழித்துதான் தெரியும்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே கலாசாரம், ஒரே கல்வி முறை இவை எல்லாமே மாநில உரிமைகளை பறிப்பதாகும். சென்னையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? வந்தால் பா.ஜனதாவில் இணைவாரா? இணைந்தால் அ.தி.மு.க. கூட்டணி வைக்குமா? என்ற சந்தேகங்கள் உள்ளன. இதையும் மீறி மக்கள் மன்றத்தில் நுழைவதற்கான வாய்ப்புகள் குறைவு என நான் கருதுகிறேன்.

நாங்குனேரி இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது? என்பது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேசி முடிவு செய்வோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை எதிர்நோக்கித்தான் நாங்கள் பயணம் செய்கிறோம்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

Next Story