முழு கொள்ளளவை எட்டியதால், பைக்காரா, கிளன்மார்கன், முக்குருத்தி அணைகளில் தண்ணீர் திறப்பு
முழு கொள்ளளவை எட்டியதால் பைக்காரா, கிளன்மார்கன், முக்குருத்தி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்ேமற்கு பருவமழை பெய்வது வழக்கம். நடப்பாண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் குறைந்து காணப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஒரு வாரம் தொடர்ந்து கனமழை பெய்தது. தீவிரமாக பெய்த கனமழையால் அணைகளில் நீர்மட்டம் வெகுமாக உயர்ந்தது.
இதனால் குந்தா அணை, பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து மழை பெய்யாததை தொடர்ந்து, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது.
ஊட்டி அருகே பைக்காரா அணை உள்ளது. இந்த அணை 100 அடி கொள்ளளவு கொண்டது. அணையில் நீர்மட்டம் 90 அடியாக இருந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மதகுகளின் மேல்வழியாக அணையில் இருந்து தண்ணீர் வழிந்தோடியது. அணை நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அங்கு சுற்றுலா பயணிகள் மோட்டார் படகு, அதிவேக மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
அதனால் அணையின் பாதுகாப்பு கருதி நேற்று பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. 3 மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றதை சுற்றுலா பயணிகள் பார்த்தனர். அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மாயார் ஆறு வழியாக தெங்குமரஹாடா பகுதியில் உள்ள பவானி ஆற்றில் கலக்கிறது.
அதனை தொடர்ந்து கிளன்மார்கன், மாயார், மசினகுடி, தெங்குமரஹாடா பகுதிகளில் ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளார். கரையோரத்தில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் ஆற்று பகுதியில் துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக்கூடாது. ஆற்றை கடக்கும் முயற்சியில் யாரேனும் ஈடுபடக்கூடாது. ஆற்றோரம் நின்று புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அங்கு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கிளன்மார்கன், முக்குருத்தி அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்த அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, கிளன்மார்கன் அணையில் இருந்து வினாடிக்கு 1,060 கனஅடியும், முக்குருத்தி அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது. குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, மாயார் உள்ளிட்ட மின்வாரிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றன.
ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தொடர் மழை பெய்து வருவதால் மண் ஈரப்பதமாக காணப்படுகிறது. இதனால் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்த மரம் ஒன்று வேருடன் சாய்ந்து வென்லாக் சாலையின் குறுக்கே விழுந்தது.
அந்த மரம் மின் ஒயர்கள் மீது விழுந்ததால், மின் ஒயர்கள் அறுந்து கீழே விழுந்தன. உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 கார்கள் சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர் மழையால் ஊட்டி நகரில் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.
Related Tags :
Next Story