நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை, பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றங்கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையின் உயரம் 100 அடி ஆகும். கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்தது.
அணைக்கு அதிக பட்சமாக 92 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
படிப்படியாக மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதனால் கடந்த மாதம் 16-ந் தேதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 6 மணிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர் மட்டம் 96.75 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 97 அடியை தாண்டியது.
எனவே அணையின் பாதுகாப்பு கருதி, 4 மதகுகள் வழியாக 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மாலையில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 12 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. பின்னர் அது 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
இதன் காரணமாக அணைக்கு வரும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் இருகரைகளை தொட்டபடி வெள்ளம் பாய்ந்து செல்கிறது.
எனவே ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பவானி ஆற்றில் இறங்கி யாரும் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story