சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வின் வெற்றி தொடர்ந்தால்தான் தமிழக மக்களுக்கு விமோசனம்
நாடாளுமன்ற தேர்தலை போல் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.வின் வெற்றி தொடர்ந்தால்தான் தமிழக மக்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று திருப்பூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்பூர்,
தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் மகன் ஆதவன் செல்வகுமாருக்கும், ஸ்ரீநேத்ராவுக்கும் திருமண விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.
விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
கொங்கு மண்டலத்தில் சீர்திருத்த திருமணங்கள் அதிகமாக நடைபெறும். அதிலும் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்று வருகிறது என்று சொன்னார்கள்.
இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள், தமிழ் திருமணங்கள் 1967-க்கு முன்பு நடைபெற்றால் அந்த திருமணங்கள் சட்டப்படி, முறைப்படி அங்கீகாரத்துடன் நடைபெறவில்லை. ஆனால் 1967-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியமைக்கப்பட்டது. முதல்-அமைச்சராக அண்ணா பொறுப்பேற்று சட்டமன்றத்தில் முதல் தீர்மானமாக சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தார்.
இந்த திருமணம் நமக்கு புரிந்த, தெரிந்த, தாய் மொழியாம் அழகு தமிழ் மொழியில் நடந்த திருமணம் இதுவாகும். தி.மு.க. என்ன செய்தது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற சீர்திருத்த திருமணங்களை சட்டவடிவமாக்கி தந்தது தி.மு.க., இந்த திருமணத்தை நான் நடத்தி வைத்ததில் பெருமைப்படுகிறேன்.
மு.பெ.சாமிநாதன் திருமணத்தை கடந்த 1990-ம் ஆண்டில் திருப்பூரில் நான் நடத்தி வைத்தேன். இப்போது அவருடைய மகன் திருமணத்தை நடத்தி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவருடைய பேரன், பேத்திகளுக்கு நான் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இப்போதே தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக மணமக்கள் அவசரப்பட்டு விடக்கூடாது. பொறுத்தார் பூமி ஆள்வார். நாங்களும் பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
தி.மு.க. ஒரு குடும்ப கட்சி என்கிறார்கள். குடும்ப கட்சிதான். அண்ணா இந்த இயக்கத்தை உருவாக்கிய நேரத்தில் அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அக்காள், தங்கை என்றே கட்சியினரை கூறினார். அதனால் தான் கலைஞர் ஒரே வரியில், என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்றார். நமது குடும்பத்தில் நடக்கும் திருமணத்தை போல் நினைத்து அனைவரும் இங்கு வந்திருக்கிறோம்.
கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூரில் தொழிற்சாலைகள் மூடக்கூடிய அவலம் உள்ளது. தொழிலாளர்கள் வேலையிழக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. 5 சதவீதத்துக்கு கீழ் நாட்டின் பொருளாதார நிலை போய்க்கொண்டிருக்கிறது. இந்த சரிவின் விளிம்பில் கோவை, திருப்பூர் உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். முதலீட்டை பெறும் எண்ணத்தோடு செல்வதாக அறிவித்து சென்றுள்ளார். நியாயமாக ஒரு முதல்-அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்றிருந்தால் உள்ளபடியே மக்கள் எதிர்பார்ப்போடு, நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால் முதல்-அமைச்சருடன், அமைச்சர்கள் 10 பேர் சென்றுள்ளனர். இன்னும் 8 பேர் போக தயாராக உள்ளதாக கூறுகிறார்கள். அதனால் தான் அ.தி.மு.க. சுற்றுலா அமைச்சரவை என்று நான் சொன்னேன்.
முதல்-அமைச்சரின் வெளிநாடு சுற்றுப்பயணம் மூலமாக ரூ.2,780 கோடியில் முதலீடு வந்துள்ளது. 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முதல்-அமைச்சர் பேசும்போது, 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினோம். 220 தொழில் நிறுவனங்கள் பணியை தொடங்கியுள்ளது என்று சொல்லியிருக்கிறார். இது அப்பட்டமான பொய். 220 தொழில் நிறுவனங்கள் எவை, எங்கு தொழில் தொடங்கியிருக்கின்றன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன்.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினார்கள். அப்போது ரூ.2.42 லட்சம் கோடிக்கு முதலீடு பெற்றதாக அறிவித்தார். 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு என்றார்கள். மொத்தம் ரூ.5 லட்சம் கோடிக்கு முதலீடு என்றார்கள். இப்போது ரூ.2,780 கோடிக்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த முதலீடுகள் தமிழகத்துக்கு வரும் என்றால் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இது உண்மையா. இதை நாங்கள் பேசினால் தமிழகத்துக்கு முதலீடு வருவதை எதிர்த்து, கொச்சைப்படுத்தி பேசுகிறார் என்ற பிரசாரத்தை பரப்புகிறார்கள். முதலீடு தமிழகத்துக்கு வந்தால் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் முதலீடு வரவில்லை.
நாட்டின் சூழ்நிலையை மூடி மறைக்க வேண்டும். அதில் இருந்து மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் தான் தற்போது நாடு போய்க்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை, யாரும் எதிர்பார்க்காத வெற்றியை தேடி தந்தவர்கள் தமிழக மக்கள். வரும் சட்டமன்ற தேர்தலிலும் அது தொடர்ந்தால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். அதை நீங்கள் உணர்ந்து அதற்கு ஏற்றவகையில் உங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story