மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை, அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.
தளி,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை நீராதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதனை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன.
அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர்இருப்பை பொறுத்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அமராவதி ஆற்றில் திறக்கப்படுகின்ற தண்ணீர் குதிரையாறு, நங்காஞ்சியாறு, பாலாறு, புறந்தலாறு, நல்லதங்காள்ஓடை போன்ற துணைநதிகளுடன் இணைந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. இந்த பயணத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரின் பாசனத்தேவையையும் நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் அணை 3 முறைக்கும் மேலாக அதன் முழுகொள்ளளவை எட்டியது. அதைத்தொடர்ந்து அணையில் இருந்து குளம், குட்டைகள் மற்றும் பாசனத்திற்காக ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றை மையமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் உயிர் பெற்றது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. விவசாயிகளும் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் கடந்தாண்டு இறுதியில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றத்தை அளித்தது. இதன் காரணமாக கோடை காலத்திற்கு முன்பாகவே வறட்சி தாண்டவம் ஆடியது. இதனால் அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களான பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. அணைக்கும் குறைந்தளவே நீர்வரத்து இருந்து வந்தது.
இதனால் பாசனத்திற்கு குறித்த காலத்தில் தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் குடிநீர் திட்டங்களும் முடங்கிப்போனது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் மூணாறு மற்றும் மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அணையின் நீர்இருப்பும் வேகமாக உயர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து அணையில் இருந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயில் உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு குறைய தொடங்கியது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்தமழை பெய்தது. இதன் காரணமாக அமராவதி அணைக்கு ஆறுகள் மூலமாக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 4-ந்தேதி 73.49 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 75.46 அடியாக அதிகரித்தது. அதன்படி அணையின் நீர்இருப்பு ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
மேலும் நேற்றும் அமராவதி அணையின் நீராதாரங்களான கேரள மாநிலம் மூணாறு, மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்தமழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழல் நிலவுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story