காங்கேயம் அருகே, பூட்டிய வீடுகளில் நகை, பணம் திருட்டு
காங்கேயம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு போனது. இது தொடர்பாக மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காங்கேயம்,
காங்கேயத்தை அடுத்துள்ள ஆறுதொழுவு ஊராட்சி தேவணம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். பனியன் நிறுவன தொழிலாளியான இவர் வழக்கம்போல நேற்று வேலைக்கு சென்று விட்டார் .இதேபோல இவரது எதிர் வீட்டில் வசிக்கும் இவருடைய உறவினரான சுந்தரம் என்பவரும் வேலைக்கு சென்று விட்டார் .இவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினரும் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்று விட்டனர்..
இந்நிலையில் நேற்று மாலை, வேலை முடிந்து பெண்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது இருவரது வீட்டின் கதவில் இருந்த பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது குமரேசன் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது .
இதேபோல எதிர் வீட்டில் வசிக்கும் அவரது உறவினர் சுந்தரம் வீட்டின் உள்ளேயும் பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கப்பணம் ரூ.28 ஆயிரம் மற்றும் அரை பவுன் தங்க நகையும் திருட்டு போனது தெரியவந்தது .இதுபற்றி தகவல் அறிந்த ஊதியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
நேற்று முன்தினமும் இதேபோல காங்கேயம் அருகே வீணம்பாளையம் கிராமத்தில் உள்ள ராஜீவ் நகரில் பந்தல் அமைப்பாளராக வேலை பார்க்கும் ரவி (37) என்பவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கட்டிலின் மெத்தைக்கு அடியில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் பீரோவில் இருந்த சுமார் ஒரு பவுன் நகை மற்றும் பொருட்கள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த 2 நாட்களில் பட்டப்பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு ,நகை,பணம் திருட்டு போவது கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தொடர் திருட்டில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story