நாகை பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு


நாகை பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Sept 2019 3:30 AM IST (Updated: 6 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

நாகை பகுதியில் ரூ.1½ கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கீழ்வேளூர், 

நாகை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், நாகை பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகை ஊராட்சி ஒன்றியம் பொரவச்சேரி கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.79 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொரவச்சேரி - கீழ ஏ.டி. காலனி சாலை மேம்பாட்டு பணிகளையும், சிக்கல் கிராமத்தில் உபரி நிதி பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 496 மதிப்பீட்டில் சிக்கல் ஊராட்சி வடக்கு தெருவில் மின் மோட்டார் அறை கட்டும் பணிகளையும், ஆலங்குடி கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.53 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் ஆலங்குடி - கங்காஒரத்தூர் சாலை மேம்பாட்டு பணிகளையும், சங்கமங்கலம் கிராமத்தில் உபரிநிதி பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 500 மதிப்பில் ஆழ்துளை கிணறு மற்றும் பைப்லைன் விரிவாக்க பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து தெத்தி ஊராட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.56 ஆயிரத்து 500 மதிப்பில் சலவை வண்ணான் குளம் தூர்வாரும் பணிகளையும், ரூ.77 ஆயிரம் செலவில் மேலநாகூர் ஒத்த குளம் தூர்வாரும் பணிகளையும், முட்டம் ஊராட்சியில் உபரி நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வடக்கு தெருவிற்கு பைப்லைன் விரிவாக்க பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெற்றிச்செல்வன், செபஸ்டியம்மாள், உதவி பொறியாளர்கள் தண்டபாணி, கலையரசன் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story