அம்மாபேட்டை அருகே பரபரப்பு: கல்குவாரி அமைக்க எதிர்ப்பு; வீடுகளில் கருப்பு கொடிஏற்றி போராட்டம்


அம்மாபேட்டை அருகே பரபரப்பு: கல்குவாரி அமைக்க எதிர்ப்பு; வீடுகளில் கருப்பு கொடிஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:45 AM IST (Updated: 6 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அம்மாபேட்டை, 

அம்மாபேட்டை அருகே கொமராயனூர் ஊராட்சிக்கு உள்பட்ட கூப்புக்காடு, பெரியார் நகர், மசக்கவுண்டனூர், வடிவேலனூர், தண்ணீர் பள்ளம் காலனி ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சி மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ளது.

இந்தநிலையில் கொமராயனூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியில் 4 கல்குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘நாங்கள் அனைவரும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். ஏற்கனவே எங்கள் பகுதியில் உள்ள குவாரிகளில் பாறைகளை உடைக்க வெடி வைக்கும்போது, அதனால் ஏற்படும் அதிர்வால் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம்.

மேலும் இங்குள்ள பலர் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனநிலையிலும், கிடைக்கிற தண்ணீரை வைத்து விவசாயம் செய்கிறோம். ஏற்கனவே உள்ள குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் ஏற்படும் அதிர்வால் ஏராளமான ஆழ்குழாய் கிணறுகள் மூடிவிட்டன. இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அதுமட்டுமின்றி வெடி சத்தத்தால் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை.

இந்த நிலையில் கொமராயனூருக்கு அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியில் மேலும் 4 கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நாங்கள் புகார் மனு அனுப்பி உள்ளோம்.

இருப்பினும் கல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாய நலன் கருதி இங்கு கல்குவாரி அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது,’ என்றனர்.

Next Story