மழைநீரை சேமிக்காவிட்டால் விவசாயம் அழிந்து விடும் - கலெக்டர் பேச்சு


மழைநீரை சேமிக்காவிட்டால் விவசாயம் அழிந்து விடும் - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 6 Sept 2019 4:15 AM IST (Updated: 6 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

மழைநீரை சேமிக்காவிட்டால் விவசாயம் அழிந்து விடும் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘நீர் வங்கி’ மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் நீர்நிலைகளை பாதுகாக்க விரும்புவோர் காசோலையாக பணம் செலுத்தலாம். இதனை கலெக்டர் கந்தசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதையடுத்து தன்னார்வலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பொதுமக்கள் பங்களிப்புடன் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் கடந்த 2 மாதங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை பாதுகாத்து பொதுமக்கள் நிரந்தரமான வாழ்க்கை வாழ்வதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,067 வருவாய் கிராமங்களில் நீர்நிலைகளை பாதுகாக்க அரசு மற்றும் நீதிமன்றம் மிகப்பெரிய ஆதரவு அளித்து வருகிறது. இது ஆரம்பம் தான். நிரந்தரமாக தீர்வு காண்பதற்காக மாவட்டத்தில் முதல் முறையாக ‘நீர் வங்கி’ மைய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் அரசுத்துறைகள், தன்னார்வலர்கள், விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக இத்திட்டம் தொடங்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டம் முன் மாதிரி மாவட்டமாக திகழ்கிறது.

இந்த இயக்கத்தில் நீர்நிலைகளை மீட்டெடுக்க எந்தவித தயவு, தாட்சனையும் பார்க்கக்கூடாது. கிராமத்தில் இருக்கும் நீர்நிலைகளை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கு நாம் வழங்க வேண்டும். நிலத்தடிநீர் மற்றும் மழைநீர் சேகரிப்பு எந்த கிராமங்களில் இருக்கிறதோ அங்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படவில்லை.

இந்த இயக்கம் நிரந்தரமாக நீர்நிலைகளை மீட்டெடுக்க செயல்பட்டு வருகிறது. நமது சொத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நம் முன்னோர்கள் நமக்கு உயிரோடு வழங்கிய நீர்நிலைகளை நாம் அழித்து வருகிறோம். கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் அது அனைவரையும் பாதிக்கும். மழைநீரை நம்பி விவசாயம் செய்யும் மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது. மழைநீரை சேமிக்காவிட்டால் விவசாயம் அழிந்து விடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story