கபிஸ்தலம் அருகே, கொங்கன் வாய்க்காலில் திடீர் உடைப்பு; விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது


கபிஸ்தலம் அருகே, கொங்கன் வாய்க்காலில் திடீர் உடைப்பு; விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 6 Sept 2019 4:00 AM IST (Updated: 6 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

கபிஸ்தலம் அருகே காவிரி ஆற்றில் இருந்து பிரியும் கொங்கன்வாய்க்கால் தலைப்பில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு அமைச்சர் துரைக்கண்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கபிஸ்தலம், 

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெரு கிராமத்தில் இருந்து காவிரி ஆற்றில் இருந்து பிரியும் கொங்கன் வாய்க்கால் மூலம் சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் மேட்டுத்தெருவில் உள்ள கொங்கன் வாய்க்கால் தலைப்பில் உள்ள இரும்பினால் ஆன ஷட்டரில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விளை நிலங்களில் கரைபுரண்டு ஓடியது.

இதனால் கொங்கன்வாய்க்கால் தண்ணீரை கொண்டு பாசனம் செய்யும் விளைநிலங்களில் மூன்றாம் போக நடவு செய்து அறுவடை செய்யும் நிலையில் இருந்த சில ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வாய்க்காலில் திடீர் உடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், செயற்பொறியாளர் ராஜன், உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர்கள் அன்பானந்தன், சேகர், சிவகுமார், யோகேஸ்வரன், முத்துமணி, மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உடைப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வைக்கோல் கட்டுகள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் ஆகியவற்றை கொண்டு தண்ணீர் வெளியேறுவதை தற்காலிகமாக கட்டுப்படுத்தினர். மேலும் தண்ணீரின் அளவு காவிரியில் குறைந்தவுடன் உடைப்பு ஏற்பட்ட வாய்க்கால் நிரந்தரமாக சீர் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை உடனடியாக சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அமைச்சருடன் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அசோக்குமார், கோபிநாதன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகதாஸ், கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.

முன்னதாக தி.மு.க. மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும் உடைப்பு ஏற்பட்ட இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு உடைப்பை உடனடியாக சரி செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.

Next Story