நாமக்கல்லில் விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:45 AM IST (Updated: 6 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்,

தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாக திருத்த கூடாது. குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் என சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, பொருளாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. நலவாரிய பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும்.

விவசாய விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ந்து வேலை வழங்கிட வேண்டும். வயது முதிர்ந்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் நன்றி கூறினார்.

Next Story