பள்ளிபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை - போலீசார் விசாரணை


பள்ளிபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 6 Sept 2019 4:15 AM IST (Updated: 6 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பள்ளிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியகாடு பகுதியில் சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான 3 அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தறி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதில் ஒரு வீட்டில் சென்னியப்பனின் உறவினரான ராமாயி (வயது 60) என்ற மூதாட்டியும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார். இவருக்கு கணவர் இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி அளவில் ராமாயி வீட்டின் முதல் மாடி படிக்கட்டில் அமர்ந்து இருந்ததை குடியிருப்பு வாசிகள் சிலர் பார்த்து உள்ளனர். அதன் பிறகு அவரது வீட்டுக்கு சென்ற ராமாயி பின்னர் வெளியே வரவில்லை. நேற்று காலை 8.30 மணி வரை அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்து உள்ளனர்.

அப்போது அவரது வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடப்படாமல் சாத்தப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராமாயி தலை, முகம், கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். சமையல் அறை சுவர் மற்றும் தரையில் ஆங்காங்கே ரத்தக்கறை படிந்து காணப்பட்டது. தட்டில் கீரையுடன் பிசைந்து வைக்கப்பட்டிருந்த சாப்பாடு அருகில் இருந்தது.

இது குறித்து உடனடியாக பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், குணசேகரன், ஜெகதீஷ் மற்றும் ஏட்டுகள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராமாயி வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட முயன்றபோது மர்ம ஆசாமிகள் திடீரென வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக அடித்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் ரத்தக்கறையுடன் ஒரு பெரிய பலகை கிடந்து உள்ளது. இதனால் பலகையால் சரமாரியாக அடித்து அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் ஆகியோர் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ராமாயி அணிந்து இருந்த நகைகள் எதுவும் திருட்டு போகவில்லை. இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பலகையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story