மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் தொடங்கியது - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருவதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல்,
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தகுதி உள்ள அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் என்ற நோக்கத்துடன் கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம் என்ற திட்டத்தினை நடைமுறைப்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த முகாம் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி வரை இந்த முகாம் நடைபெறும்.
இதன்படி வாக்காளர்கள் தாங்களாகவே, தங்களது வாக்காளர் பட்டியல் விபரங்களை சரிபார்க்கலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வீடு, வீடாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கவும், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பார்கள்.
இத்திட்டத்தின்படி வாக்காளர்கள் தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் வயது, உறவினர் பெயர், புகைப்படம் மற்றும் பாலினம் போன்றவற்றை சரிபார்க்கலாம்.
வாக்காளர் விவரங்களை சரிபார்ப்பதற்கு இணையதளம், செல்போன் செயலி, 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணை அழைத்தல், உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள வாக்காளர் உதவி மையத்தை அணுகுதல், பொது இ-சேவை மையங்களை அணுகுதல், வாக்குச்சாவடி நிலை அலுவலரை நேரடியாக அணுகுதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.
இவ்வாறு சரிபார்க்கப்பட்ட பின்னர் அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வெளியிடப்படும். வாக்காளர்கள் அதனையும் சரிபார்த்து கொள்ளலாம்.
மேலும் 1.1.2020 அன்று 18 வயது பூர்த்தியடையும் நபர்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாளான அக்டோபர் மாதம் 15-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலரிடம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவை தொடர்பாக படிவங்கள் சமர்ப்பிக்கலாம். மேலும் நவம்பர் மாதம் 2, 3, 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்கு மனு அளிக்கலாம். இம்மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் நாளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி, தங்களது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story