மல்லூர் அருகே பயங்கரம்: கல்லூரி மாணவர் குத்திக்கொலை - நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


மல்லூர் அருகே பயங்கரம்: கல்லூரி மாணவர் குத்திக்கொலை - நண்பர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Sept 2019 3:45 AM IST (Updated: 6 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

மல்லூர் அருகே கல்லூரி மாணவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பனமரத்துப்பட்டி, 

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் திலீப்(வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். காந்தி நகரை சேர்ந்தவர்கள் சரவணன், திருநாவுக்கரசு. இவர்கள் 2 பேரும் திலீப்பின் நண்பர்கள் ஆவர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் திலீப் அவர்களிடம் பேசாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் திலீப் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தையிடம், உங்களது மகன் எங்களிடம் அடிக்கடி தகராறு செய்து வருகிறான் என்றும், அவனை கண்டித்து வையுங்கள் என்றும் கூறி உள்ளனர்.

இதற்கிடையில் நேற்று இரவில் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் சமாதானம் பேசுவதற்காக திலீப் மற்றும் அவருடைய உறவினரான நஞ்சம்பட்டியை சேர்ந்த சரண்(18) ஆகியோரை அருகில் உள்ள ஒரு காலி இடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு முன்விரோதம் காரணமாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலீப் மற்றும் சரணை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே திலீப் பரிதாபமாக இறந்தார். சரணுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக சரவணன், திருநாவுக்கரசு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story