மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமம் தெற்கு பகுதியில் உள்ள காலனி தெருவில் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அதேபகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், அதன் அருகே ஆழ்துளை கிணறும் அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் இயங்குவதில்லை. இதனால், தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஜெயங்கொண்டம்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குருவாலப்பர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வக்குமார், இளங்கோவன், தனஞ்செயன், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், மின்மோட்டார் பழுதை உடனடியாக சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story