வடக்கு விஜயநாராயணத்தில் விவசாயிகள் திடீர் உண்ணாவிரதம்


வடக்கு விஜயநாராயணத்தில் விவசாயிகள் திடீர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 5 Sep 2019 9:45 PM GMT (Updated: 5 Sep 2019 8:41 PM GMT)

வடக்கு விஜயநாராயணத்தில் குளத்து கரையில் புதிதாக தடுப்புச்சுவர் கட்டித்தர கோரி விவசாயிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் உள்ள பெரிய குளம் மாவட்டத்திலேயே மிகப்பெரிய குளம் ஆகும். இந்த குளத்தில் தற்போது ரூ.2 கோடி செலவில் தமிழக அரசு சார்பில், குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குளத்தின் கரைகள் பொக்லைன் எந்திரம் மூலம் மண் போட்டு உயர்த்தப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குளத்தின் கரையில் உள்ள தடுப்பு சுவர்களை புதிதாக கட்டித்தர வலியுறுத்தியும் நேற்று காலை அப்பகுதி விவசாயிகள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் தலைமையில், நடுமடை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தியாகராஜன், பிரகாஷ், பரஞ்சோதி, மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திசையன்விளை தாசில்தார் ஆவுடைநாயகம், நாங்குநேரி பொதுப்பணித்துறை பொறியாளர் பாஸ்கர், வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் குளத்தின் கரைகளில் உள்ள தடுப்புச்சுவர் வேலைகள் தொடங்கும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story