திருமானூர் அருகே சொத்து தகராறில் தந்தை அடித்துக்கொலை - மகன் உள்பட 2 பேர் கைது


திருமானூர் அருகே சொத்து தகராறில் தந்தை அடித்துக்கொலை - மகன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sep 2019 9:45 PM GMT (Updated: 5 Sep 2019 8:41 PM GMT)

திருமானூர் அருகே சொத்து தகராறில் தந்தையை அடித்துக்கொலை செய்த மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மரவனூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 70). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமராவதி. இவர்களது மகன் செந்தில்குமார்(40). செல்லமுத்து-அமராவதி தனியாகவும், அவரது வீட்டின் அருகே செந்தில்குமாரும், செல்லமுத்துவின் அண்ணன் மகன் பழனியாண்டியும்(37), தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். செல்லமுத்துக்கும், அவரது மகன் செந்தில்குமார், அண்ணன் மகன் பழனியாண்டி ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லமுத்து தனது வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த செந்தில்குமார், அவரது மனைவி பாப்பாத்தி மற்றும் பழனியாண்டி, அவரது மனைவி வள்ளி ஆகிய 4 பேரும் சேர்ந்து கொண்டு செல்லமுத்துவிடம் சொத்து தொடர்பாக தகராறு செய்தனர்.

அப்போது தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், பழனியாண்டி ஆகியோர் செல்லமுத்துவை கையால் தாக்கியும், காலால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் திண்ணையில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த செல்லமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து செந்தில்குமார், பழனியாண்டி, பாப்பாத்தி, வள்ளி ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்லமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அமராவதி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், பழனியாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாப்பாத்தி, வள்ளி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து பிரச்சினையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story