கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி ஊராட்சி பள்ளி முன் பெற்றோர்கள், மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்


கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி ஊராட்சி பள்ளி முன் பெற்றோர்கள், மாணவர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:00 AM IST (Updated: 6 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்கக்கோரி ஊராட்சி பள்ளி முன் பெற்றோர்கள், மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

அறந்தாங்கி பேராவூரணி சாலையில் வல்லம்பக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 95 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கும் ஒரே ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவ, மாணவிகள் ஒழுங்காக படிக்க வில்லையென பெற்றோர்கள் குற்றம் சாட்டி கூடுதலாக பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று வட்டார கல்வி அலுவலர் அருளிடம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் மனுவில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். இல்லை என்றால் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்பாமல் பள்ளியின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர் அருள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக இந்த பள்ளிக்கு கூடுதலாக 2 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசு மூலம் நிரந்தரமான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என கூறினார். இதையடுத்து பெற்றோர்கள் தற்போது பள்ளிக்கு தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள 2 ஆசிரியர்களையும் நிரந்தரமான ஆசிரியர்கள் நியமனம் செய்யும் வரையில், வேறு எந்த பள்ளிக்கும் மாற்றம் செய்ய வேண்டாம் என்று கூறி போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்ததையடுத்து வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது.

Next Story