பால்கர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ஆட்டோ நுழைந்ததால் பரபரப்பு; டிரைவர் கைது


பால்கர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ஆட்டோ நுழைந்ததால் பரபரப்பு; டிரைவர் கைது
x
தினத்தந்தி 5 Sep 2019 11:00 PM GMT (Updated: 5 Sep 2019 10:10 PM GMT)

பால்கர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ஆட்டோ நுழைந்ததால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

வசாய், 

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள பால்கர் ரெயில் நிலையத்தின் 1-ம் எண் பிளாட்பாரத்துக்குள் நேற்று திடீரென ஆட்டோ ஒன்று புகுந்தது. இதை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதற்கிடையே அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தனர்.

இதில், அவரது பெயர் பிண்டு(வயது35) என்பது தெரியவந்தது. அவரது ஆட்டோவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் இருந்தார்.

அவரது பெயர் மஸ்வான் என்பதும், மும்பையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில், அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை திரும்புவதற்காக அவரது குடும்பத்தினர் ஆட்டோவில் பால்கர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் ரெயில் வருவதை பார்த்ததும் மஸ்வான் குடும்பத்தினர் ஆட்டோவில் இருந்து இறங்கி ரெயிலை பிடிப்பதற்காக ஓடினர்.

மஸ்வானால் நடந்து செல்ல முடியாது என்பதால் அவரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக பிண்டு ஆட்டோவுடன் பிளாட்பாரத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது. இருப்பினும் ரெயில்வே விதிமுறையை மீறி ஆட்டோவை ரெயில் நிலைய பிளாட்பாரத்துக்குள் ஓட்டி வந்ததால் போலீசார் பிண்டுவை கைது செய்தனர். மேலும் முதியவர் மஸ்வானை சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஏற்கனவே கர்ப்பிணிக்கு உதவி செய்வதற்காக விரார் ரெயில் நிலையத்திற்குள் ஆட்டோ ஒன்று நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story