மதுராந்தகம் அருகே குடிசையில் தீ விபத்து; கியாஸ் சிலிண்டர் வெடித்தது - ரெயில்வே ஊழியர் படுகாயம்


மதுராந்தகம் அருகே குடிசையில் தீ விபத்து; கியாஸ் சிலிண்டர் வெடித்தது - ரெயில்வே ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Sep 2019 10:55 PM GMT (Updated: 5 Sep 2019 10:55 PM GMT)

மதுராந்தகம் அருகே குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் ரெயில்வே ஊழியர் படுகாயம் அடைந்தார்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 52). நேற்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் மின்கசிவு காரணமாக குடிசை தீப்பற்றி எரிந்தது. இதில் குடிசையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். அவர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ரெயில்வே ஊழியர் பொன்னம்பலம் (50) என்பவர் தீயை அணைக்க முயன்றார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருகில் இருந்த சசிகலா என்பவரது குடிசையும் தீப்பற்றி எரிந்தது. குடிசை எரிந்து சாம்பல் ஆனதில் செல்லக்கண்ணு தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 3 பவுன் நகை, ரூ.5 ஆயிரம், மரகட்டில், மரபீரோ உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் விரைந்து சென்று செல்லக்கண்ணு குடும்பத்திற்கு அரிசி, துணி மற்றும் உதவி பொருட்களை வழங்கினார். இது குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ளது அனுமந்தண்டலம் கிராமம். அங்கு குடும்பத்தினருடன் வசித்து வருபவர் முருகன். வக்கீலான இவரது வீட்டில் நேற்று மதியம் சமையல் செய்தபோது திடீரென்று கியாஸ் கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான முருகனின் மனைவி தமிழ்மொழி கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தார். கிராம மக்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. கியாஸ் சிலிண்டர் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து ஓடினர். அக்கம்பக்கம் வீட்டில் வசிப்பவர்களும் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் தீயணைப்புத்துறையினர் சாதுரியமாக செயல்பட்டு கியாஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தியதுடன் வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Next Story