கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் திறப்பு


கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
x
தினத்தந்தி 5 Sep 2019 11:30 PM GMT (Updated: 5 Sep 2019 10:55 PM GMT)

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹேமாவதி அணையும் நிரம்பி உள்ளது.

ஹாசன், 

ஹாசன் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஹாசன் மாவட்டத்தில் ஓடும் ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக ஹாசன் மாவட்டம் கொரூரில் ஹேமாவதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது.

ஹேமாவதி அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,922 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் ஹேமாவதியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று காலையில் ஹேமாவதி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது. அதாவது அணையின் நீர்மட்டம் 2,921.51 அடியை எட்டிவிட்டது.

அணை நிரம்பியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப் படியே மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10,400 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்பி உள்ளதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 6 மதகுகள் வழியாக வினாடிக்கு 10,400 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஹேமாவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதுமட்டுமல்லாமல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணையில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணை ஏற்கனவே தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டிவிட்டது.

இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 18,210 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் மாலையில் அணைக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 36,454 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையில் இருந்து காவிரி ஆற்றிலும், கால்வாய்களில் திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 15,301 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்தது. அது தற்போது வினாடிக்கு 43 ஆயிரத்து 597 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள கபினி அணையும் ஏற்கனவே நிரம்பி விட்டது. நேற்று காலை நிலவரப்படி 2,284 அடி(கடல் மட்டத்தில் இருந்து) நீர்மட்ட கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,283.23 அடி அளவில் தண்ணீர் இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 21,962 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 26,650 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கபிலா ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்மூலம் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 70 ஆயிரத்து 247 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

Next Story