திருமணமான 2 ஆண்டுகளில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை


திருமணமான 2 ஆண்டுகளில், தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 2:50 PM GMT)

சுவாமிமலை அருகே திருமணமான 2 ஆண்டுகளில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் உதவி கலெக்டர் காரை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள உத்திரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன். கட்டிட தொழிலாளி.  இவருடைய மனைவி ரேகா(வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மனைவி ரேகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேகாவின் தந்தை ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார்கள். ரேகாவுக்கு திருமணமாகி 
2 ஆண்டுகளே ஆவதால்  கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் பிரேத பரிசோதனைக்கு பின் ரேகாவின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். அப்போது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ரேகாவின் சாவுக்கு அவரது கணவர் மற்றும் மாமியார் தான் காரணம் என கூறி அவர்களை கைது செய்யும் வரை ரேகாவின் உடலை வாங்க மாட்டோம் என கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு வந்த கும்பகோணம் உதவி கலெக்டர் வாகனத்தையும் அவர்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். உடனே அங்கு வந்த கும்பகோணம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர். இருப்பினும் ரேகாவின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் கூறிவிட்டதால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரேகாவின் உடல் வைக்கப்பட்டு உள்ளது.

Next Story