மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு விரைவில் வழங்கப்படும் - முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்


மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு விரைவில் வழங்கப்படும் - முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 4:15 PM GMT)

மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு விரைவில் வழங்கப்படும் என முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

தேனி,

நாட்டு மாடுகள் வளர்ப்பவர்கள் அவற்றை மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான அனுமதிச்சீட்டு கேட்டு மாவட்ட நிர்வாகத்தையும், வனத்துறை அதிகாரிகளையும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை, விவசாயிகள் பங்கேற்கும் வகையில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவித்தார். அதன்படி தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் முத்தரப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார்.

மாவட்ட வன அலுவலர் கவுதம், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காராம் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மலைமாடுகள் வளர்க்கும் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். அவர்கள் பேசும்போது, ‘மலைமாடுகளுக்கு இந்த ஆண்டு தாமதமின்றி மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும். கடந்த காலங்களில் வழங்கியது போல் அதிக எண்ணிக்கையில் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அனுமதிச்சீட்டு எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வருவதால் நாட்டு மாடு இனங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும் என்று கலெக்டர் அறிவித்த பின்பும் வனத்துறையால் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டு வருகிறது. அதை தடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மலைமாடுகள் மேய்க்கும் விவசாயிகள் 136 பேர் உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. ஆனால், குறைவான எண்ணிக்கையில் தான் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது’ என்றனர்.

இதன்பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘மலைமாடுகள் வளர்க்கும் விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்னும் தங்கள் பகுதியில் உள்ள மாடுகளின் முழுமையான பட்டியலை வனத்துறை அதிகாரிகளிடம் கொடுக்காமல் உள்ளனர். அவற்றை ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விரைவில் மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கப்படும். மேய்ச்சல் மாடுகளுக்கான பட்டிகளை விரைவில் நான் நேரில் வந்து பார்வையிட உள்ளேன்’ என்றார்.

அப்போது, மாடுகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் முன்வைத்தனர். அதற்கு விவசாயிகள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சிலரும் பங்கேற்றனர். அவர்கள் பேசும்போது, ‘விருதுநகர் மற்றும் தேனி மாவட்ட வன எல்லைப் பகுதிகளில் நாங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறோம். பல ஆண்டுகளாக இதே நடைமுறை தான் உள்ளது. ஆனால், தற்போது அங்கு மேய்ச்சலுக்கு செல்வதற்கு தேனி மாவட்ட வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். எனவே, அதற்கான அனுமதியை வழங்க வேண்டும்’ என்றனர். அப்போது வனத்துறை அதிகாரிகள், இதுகுறித்து மனு அளித்தால் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Next Story