இலங்கையில் சிங்களர்களால் இந்துக்களின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது - மட்டக்களப்பு எம்.பி. பேட்டி


இலங்கையில் சிங்களர்களால் இந்துக்களின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது - மட்டக்களப்பு எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 7 Sept 2019 4:00 AM IST (Updated: 6 Sept 2019 9:54 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் சிங்களர் களால் இந்துக்களின் உரிமை நிராகரிக்கப்பட்டு வருகிறது என்று மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஷ்வரன் கூறினார்.

கொடைக்கானல்,

கொடைக்கானல் நகர, ஒன்றிய இந்து மக்கள் கட்சியின் சார்பாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விநாயகர் சிலைகள் அனைத்தும் வாகனங்களில் ஏற்றப்பட்டு நாயுடுபுரத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது.

இதற்காக நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கார்த்திக், அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சக்திதரன் வரவேற்றார். இதில் இலங்கை மட்டக்களப்பு எம்.பி. சீனித்தம்பி யோகேஷ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் கொடைக்கானல் முன்னாள் நகரசபை தலைவர்கள் ஸ்ரீதர், முகமது இப்ராகிம், பெரிய மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, கட்டிட கட்டுமானோர் சங்க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. அவைத்தலைவர் ஜான்தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஊர்வலம் டெப்போ, ஏரிச்சாலை, 7 ரோடு சந்திப்பு, அண்ணா சாலை, ஆனந்தகிரி தெரு வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆற்றுக்கு சென்றது. இதையடுத்து அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முன்னதாக மட்டகளப்பு எம்.பி சீனித்தம்பி யோகேஷ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் பூர்வீக இந்து பகுதியாகும். இதை யாரும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது. இலங்கையில் பெரும்பான்மை என்ற பெயரில் சிங்களர்களால் இந்துக்களுக்கான உரிமைகள் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளிகளுக்கு குடியேறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்கு தான்.

மீனவர்கள் பிரச்சினை தற்போது ஓரளவு ஓய்ந்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகும் கூட பிரதமர் ஒரு கட்சியிலும், ஜனாதிபதி ஒரு கட்சியிலும் இருந்து கொண்டு சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பெயரளவில் தான் மேற்கொண்டு வருகிறார்கள். இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரித்தும் அதனை உதாசீனபடுத்தியது தான் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணம்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ராணுவ கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அப்பகுதியில் குடியேற வேண்டும். அங்கு ஓரளவு அமைதி நிலவிய நிலையில் ஏப்ரல் மாதம் நடந்த குண்டு வெடிப்பால் கிறிஸ்தவ தமிழ் மக்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story