ரிஷிவந்தியம் அருகே, போலி டாக்டர்கள் 2 பேர் கைது
ரிஷிவந்தியம் அருகே போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டுரோட்டில் ஆரோக்கிய மையம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு போலி மருத்துவம் பார்ப்பதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் சுகாதார பணிகள் இணை இயக்குனர் சண்முககனி, மாவட்ட அலகு அலுவலர் ராஜ்குமார், மருந்து ஆய்வாளர் தீபா மற்றும் பகண்டை கூட்ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் நேற்று காலையில் அந்த மையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 3 பேர், மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து மருந்து வழங்கி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த மருந்துகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டவை மற்றும் தரமற்றவை எனவும் தெரிந்தது.
மேலும் இந்த மையத்தை திருக்கோவிலூர் ஒன்றியம் அருங்குறிக்கை கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் கோவிந்தன்(வயது 25), இவருடைய மனைவி அருண்யா(24), தமிழ்பாலன் ஆகியோர் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
பின்னர் அங்கிருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த மையத்துக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் இதுகுறித்து இணை இயக்குனர் சண்முககனி பகண்டை கூட்டுரோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அருண்யா உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தன், தமிழ்பாலன் ஆகியோரை கைது செய்தனர். இதில் தமிழ்பாலன் என்ஜினீயர் ஆவார். கோவிந்தன் 10-ம் வகுப்பு படித்துள்ளார்.
Related Tags :
Next Story