திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், குடிமராமத்து திட்டப்பணிகளை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், திட்டங்கள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியுடன் சென்று கள ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் அலுவலகத்தில் ‘ஜல் சக்தி அபியான்’ நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் திறக்கப்பட்டுள்ள ‘நீர் வங்கி‘ அலுவலகத்தை பார்வையிட்டார். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் 2018- 19-ம் ஆண்டு ரூ.6 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் கட்டப்படுகிறது. இதனையும் அவர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் வேங்கிக்கால் ஏரிக்கரையோரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக பிரதான் மந்திரி கானிஜ் சேஷத்ரா கல்யாண் யோஜனா மாவட்ட கனிம அடித்தள நிதி திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ‘அறிவியல் பூங்கா‘ கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதை, காஞ்சி சாலையில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக 55 இடங்களில் பட்டுப்போன மரங்களை மரச் சிற்பங்களாக உருவாக்கும் பணிகள், கிரிவலப் பாதை, ஈசான்ய லிங்கம் அருகில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் 3.35 ஏக்கர் இடத்தில் பொதுப்பணித் துறை (கட்டிடம் மற்றும் பராமரிப்பு) மூலமாக ரூ.28 கோடி மதிப்பீட்டில் 123 அறைகளுடன், 430 நபர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் ‘யாத்ரி நிவாஸ்‘ கட்டிடத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றையும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து முதல்- அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தச்சம்பாட்டு ஊராட்சி ஏரியில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை மூலமாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள், நல்லான்பிள்ளை பெற்றாள் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பெரியண்ணன் கோவில் குளம் சீரமைக்கும் பணிகள், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீரனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் சுக்கேரிக்குட்டை குளம் சீரமைக்கும் பணிகள், குளத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை மூலமாக ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றையும் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் கீழ்பென்னாத்தூர் ஜமீன் கூடலூர் ஊராட்சியில் தோட்டக்கலைத் துறை மூலமாக சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம், பழச்செடி நடவு, நிழல் வலைக்குடில், கல்பந்தல், பசுமை குடில் ஆகிய திட்டங்களின் கீழ் அரசு மானியத்தில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான 4 ½ ஏக்கர் நிலத்தில் பழத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முலாம்பழம், கிரினிப்பழம், தர்பூசணி ஆகிய பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இவற்றையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சந்திரா உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story