திருவள்ளூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை


திருவள்ளூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 7 Sept 2019 3:30 AM IST (Updated: 6 Sept 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூர் கிராமம் சவேரியார் தெருவை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 61). இவர் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

நேற்று முன்தினம் லூர்துசாமி தன் மனைவி மேரிகரோலின் (53), மகள் ஜான்பிரவீன் (30), மகள் மேரிபிரசாந்தி (22) ஆகியோருடன் வீட்டின் 2-வது தளத்தில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது கீழ் தளத்தில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.30 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து லூர்துசாமி மப்பேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

Next Story