புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தர்மபுரி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கவுரன், ராசாஆனந்தன், சேகர், கவிதா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிரானதாக உள்ள புதிய தேசிய கல்விக்கொள்கை 2019-ஐ மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வியை பாதிக்கும் அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளை 20 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உள்ள மேல்நிலை பள்ளிகளோடு இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணிமாறுதல் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் அரூர், மொரப்பூர், நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய இடங்களில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story