2 கிராம் தங்கத்தில் சந்திரயான்-2 விண்கல மாதிரி வடிவமைப்பு; பெங்களூரு தொழிலாளி அசத்தல்


2 கிராம் தங்கத்தில் சந்திரயான்-2 விண்கல மாதிரி வடிவமைப்பு; பெங்களூரு தொழிலாளி அசத்தல்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:00 AM IST (Updated: 6 Sept 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

நிலவு ஆராய்ச்சியில் இந்தியா வரலாற்று சாதனை படைக்க உள்ள நிலையில் சந்திரயான்-2 விண்கல மாதிரியை பெங்களூருவை சேர்ந்த தொழிலாளி 2¾ கிராம் தங்கத்தில் வடிவமைத்து அசத்தியுள்ளார்.

பெங்களூரு, 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் புவிவட்டபாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கியது. 5 முறை சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டபாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ந்தேதி விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. தற்போது விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நடக்கிறது. அதாவது அந்த நேரத்தில் விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறக்கம் செய்கிறார்கள். அதன் பின்னர் நிலவை விக்ரம் லேண்டரும், அதில் இருந்து பிரியும் பிரக்யான் ரோவரும் ஆய்வு செய்யும்.

இத்தகைய நிகழ்வு முடிவடையும் போது இந்தியா வரலாற்று சாதனையில் இடம்பிடிக்கும். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு தொழிலாளி சந்திரயான்-2 விண்கலத்தை தங்கத்தில் வடிவமைத்து அசத்தியுள்ளார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் ரேவங்கார். தங்கநகை தொழிலாளியான இவர் சந்திரயான்-2 விண்கலத்தின் மாதிரியை தங்கத்தில் வடிவமைத்துள்ளார். அதாவது 2 கிராம் 700 மில்லி தங்கத்தில் 4.5 சென்டிமீட்டர் உயர சந்திரயான்-2 விண்கல மாதிரியை உருவாக்கியுள்ளார். இதற்கு பாகுபலி ராக்கெட் என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்த விண்கலத்தில் மூவர்ண கொடி இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து நாகராஜ் ரேவங்கார் கூறுகையில், “நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதில் இந்தியா சாதனை படைக்க உள்ளது. இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் மாதிரி வடிவத்தை தங்கத்தில் உருவாக்கியுள்ளேன். இதனை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த விண்கல மாதிரியை தங்கத்தில் வடிவமைக்க 30 மணி நேரம் ஆனது“ என்றார். 

Next Story