17 தொகுதிக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக முடிவு - அரவிந்த் லிம்பாவளி பேட்டி


17 தொகுதிக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக முடிவு - அரவிந்த் லிம்பாவளி பேட்டி
x
தினத்தந்தி 7 Sept 2019 4:45 AM IST (Updated: 7 Sept 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக முடிவு செய்துள்ளதாக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பிறகு பா.ஜனதா பொதுச் செயலாளர் அரவிந்த் லிம்பாவளி கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள் ஆர்.அசோக், ஜெகதீஷ் ஷெட்டர், பொதுச்செயலாளர் அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரவிந்த் லிம்பாவளி நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 8-ந் தேதி மாநிலம் முழுவதும் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் தீவிரமாக நடத்துவது என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் மாநிலம் முழுவதும் ஒரு பூத் கமிட்டிக்கு 2 பேர் வீதம் ஒரு லட்சம் பேர் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.

உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்த பிறகு பூத் மற்றும் மண்டல அளவில் குழுக்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக கட்சியின் மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அறிக்கை பெற்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் கர்நாடக சட்டசபையில் 17 தொகுதிகள் காலியாக உள்ளன. அந்த தொகுதியில் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவில் யார் சேருவார்கள் என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால் அந்த தொகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அனைத்து முயற்சியும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதத்தில் கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள இப்போது இருந்தே தயாராவது என்று முடிவு செய்துள்ளோம்.

கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கும், எங்கள் கட்சியின் அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது என்று தீர்மானிக்கப்பட்டது. கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணியில் அரசுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசும், கட்சியும் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அரவிந்த் லிம்பாவளி கூறினார். 

Next Story